“இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது தார்மீக உரிமை”! காஷ்மீரில் மத்திய அரசின் கெடுபிடி குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!!
இணையதளங்கள் மூலம் கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் தார்மீக உரிமை உள்ளது என்றும், காஷ்மீரில் இணைய தளங்கள் முடக்கப்பட்டது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 3 70-வது சட்டப்பிரிவை, கடந்தாண்டு ஆகஸ்டில் மத்திய அரசு திடீரென ரத்து செய்தது.அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து விட்டது.
காஷ்மீரில் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளும் முன், மத்திய அரசு , வரலாறு காணாத கெடுபிடிகளை அம்மாநிலத்தில் அமல்படுத்தியது. ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை முன்கூட்டியே குவித்தது. அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மெகபூபா முப்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரை வீட்டுச் சிறையில் அடைத்தது.
அது மட்டுமின்றி அம்மாநில மக்களின் வெளியுலக உலகத் தொடர்பை துண்டிக்கும் வகையில், தொலை பேசி, செல்போன், இணைய தள சேவைகள் ஒட்டு மொத்தமாக முடக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலத்திற்குள், இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ராகுல் காந்தி உள்ளிட்ட பிற கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் காஷ்மீருக்கு விமானத்தில் செல்ல முயன்ற போதும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீரில் கிட்டத்தட்ட 6 மாதங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது எனலாம். ஒரு சில பகுதிகளில் மட்டும் தொலைத் தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்தக் கெடுபிடிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்தன. காஷ்மீர் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றம் ஒன்றாக விசாரணை நடத்திய நிலையில், இணைய தள சேவைகள் முடக்கம் குறித்து இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது என்பது தனிநபரின் தார்மீக உரிமை. தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்பை காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. எனவே காஷ்மீரில் இணைய தள சேவைகளை முடக்கியது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். இணையதள சேவைகளை முடக்கியது குறித்து ஒரு வாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





