சபரிமலை வழக்கு 7 பேர் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு – பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவு தொடரும்
சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற மரபு, பல்லாண்டு காலமாக இருந்து வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் எல்லா வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 இல் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு தரப்பினரால் 56 மறு ஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என, மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பிப்ரவரி மாதம் 6இல், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இவ்வழக்கில், 9 மாதங்களுக்கு பின்னர் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. 5 நீதிபதிகளில் 3 பேர், `பெரிய அமர்வுக்கு மாற்றலாம்’ என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், மற்ற இருவர் அந்தக் கருத்திலிருந்து மாறுபட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். ஆனால், நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் இந்தக் கருத்தில் மாறுபட்டுள்ளனர்.
பெரும்பான்மை அடிப்படையில் சபரிமலை வழக்கு தொடர்பான மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அதேநேரம், `சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவு தொடரும்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.





