செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?
வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து, காவல்துறையினருக்கே களங்கம் ஏற்படுத்தி வரும் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சில போலீசாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது காவல்துறை. வேலியே பயிரை மேயும் கதையாக லஞ்சம், முறைகேடு, குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையே லஞ்சத்தில் மூழ்கித் திளைப்பதாக, பல வழக்குகளில் நீதிமன்றங்களே சாடுமளவுக்கு மலிந்து கிடக்கிறது. தமிழக காவல் துறையில் காவல் நிலைய எழுத்தர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், ரோந்து காவலர்கள் ஆகிய நிலைகளில், அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. காவல்துறையினர் மத்தியில் லஞ்சம் அதிகரிப்பதால், பல நல்ல காவலர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் சங்கடங்களுக்கு உள்ளாகின்றனர்.
காவல் துறையினரின் லஞ்ச லாவண்யத்திற்கு உதாரணமாகத் திகழ்கிறது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தின் பெயரைக் கேட்டாலே சுற்று வட்டாரத்தில் எல்லோரும் மிரட்சியோடு பார்க்கிறார்கள். அந்தளவுக்கு இந்த காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சில காவல்துறையினரை, லஞ்சப் பேய் பிடித்து ஆட்டுவதாக, பொதுமக்களே குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு பல உதாரணங்களை அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதை உறுதி செய்வது போல், இந்த காவல் நிலையத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதத்தில், சிறுமி மாயமானது குறித்து புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, செம்பட்டி காவல் நிலையத்தை கெண்டிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு, பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பாவி கிராம மக்கள் என்றும் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இறுதியில், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி தலையிட்டு சமரசம் செய்யும் அளவுக்கு பிரச்சனையை முற்றுவிட்டுள்ளனர் செம்பட்டி போலீசார்.


காசு பாா்க்கும் காக்கிகள்
செம்பட்டி காவல்துறையினர் உரிய விழிப்போடு இல்லாததால் இந்த மாதத்திலும் பெரிய பிரச்சனை ஒன்று வெடித்தது. மல்லையாபுரத்தில் கோவில் திருவிழாவின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு பிரிவினர், தாங்கள் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பொதுவாக காவல் நிலையம் என்றாலே பொதுமக்கள் வருவது, பஞ்சாயத்து நடப்பது, கஸ்டடி விசாரணை என்பதெல்லாம் சகஜம்தான். ஆனால், செம்பட்டி காவல் நிலையத்தின் செயல்பாட்டால் பொதுமக்கள் அடிக்கடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு விசாரணை மீது கவனம் செலுத்தாமல் பணத்தாசையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
செம்பட்டி காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் சிலர் நம்மிடம் கூறியதாவது: பொதுவாக போலீசார் என்றால் சிலர் லஞ்சம், மாமூல் வாங்குவது வழக்கம். ஆனால், செம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா் உள்ளிட்ட பெரும்பாலானோர் மாமூல் இல்லாமல் அவர்களின் மாமூல் வாழ்க்கை ஓடாது. அந்தளவுக்கு எல்லாவற்றிலும் காசு பார்க்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்களிடம் லஞ்சம், வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம், வாகன விதிமீறல் என்றால் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் என்று சகலவற்றிலும் காசு பார்க்கின்றனர்.
இதேபோல், தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் அடிக்கடி நடக்கும் விபத்துகள், இந்த காவல் நிலையத்திற்கு காசு பார்க்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். மோட்டார் வாகன விபத்து ஏற்பட்டால், வழக்கு பதியாமல் இருக்க, வசதிபடைத்த கார் உரிமையாளர்களிடம் ஒருபக்கம் காசு வாங்கிக் கொள்கின்றனர். பின்னர், இந்த விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிக்கும் இருசக்க வாகன ஓட்டிகளிடம், வாகன காப்பீடு பெறலாம் என்று ஆசை காட்டி, கமிஷன் அடிப்படையில் பேரம் பேசுகின்றனர்.
காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , கடந்த மாதம் ஓய்வு பெற்ற சாா்பு ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டவர்கள், சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விட்டு, தங்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தி தூண்டிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, ஆய்வாளா் என்ற முறையில், அவர்களை மிரட்டுவதாகவும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வாறு விபத்தில் சிக்கும் வாகன உரிமையாளர்களிடம், வழக்கு பதியாமல் இருக்க முதலில் பெரிய தொகையை கறக்கின்றனர். மறுபுறம் விபத்தில் பாதிக்கப்பட்டவரிடமும் இன்ஷூரன்ஸ் தொகைக்கு கமிஷன் பேசிக் கொள்கின்றனர். தொடர்ச்சியாக இதுபோல் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் செட் அப் விபத்துகளை அரங்கேற்றுகின்றனரா என்ற சந்தேகம் கூட உண்டாகிறது.

கடந்த 7, 8 மாதங்களுக்கு முன்பு, திருப்பூரைச் சேர்ந்த பிரபலமான வார இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், திருச்செந்தூருக்குச் சென்றுவிட்டு, செம்பட்டி வழியாக தனது காரில் திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஒன்வே சாலையில் ஹெல்மெட் இல்லாமல் குடிபோதையில் வந்த வாகன ஓட்டி, அவர் காரின் வலதுபக்க சைடு மிரர் கீழ் ஒரசியபடி சென்று கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகன ஓட்டி மீது தவறு இருந்த போதிலும், அந்த பத்திரிகை ஆசிரியரும் காரில் இருந்த நண்பர்களும் தங்களது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வந்தனர். விபத்துக்குள்ளானவர் வர மறுத்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்கமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்குத்தான் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செம்பட்டி காவல் துறையினரும், 3 நாட்களுக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கை, எஸ்.ஐ. வேல்முருகன் என்பவர் விசாரித்து வந்தார். பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்காததால் வழக்கு முடித்துவைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, அவர் ஒட்டச்சத்திரம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். மாற்றப்பட்ட அவர், இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கத் தயார் எனவும், செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளரின் போக்கு சரியில்லை என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மேற்படி சாலை விபத்து குறித்து சம்மந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியருக்கு தற்போது விபத்து காப்பீட்டு நிறுவனம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ பதிவுகள், காவல்துறையினர் தெரிவித்த கருத்துகள் குறித்த பதிவுகள் உள்ள நிலையில், காப்பீடு தொகை பெறும் உள் நோக்கத்துடன் போலீசார், இந்த வழக்கை மீண்டும் தோண்டியெடுக்கின்றனரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், நமது கள விசாரணையில், செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமார், போலீசார் சிலரின் செயல்பாடுகள், ஒட்டுமொத்த காவல்துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. வாகன ஓட்டிகளிடம் வசூல், லாரிகளை நிறுத்தி டிரைவரிடம் வசூல், புகார் கொடுக்கச் செல்வோரை அழைக்கழிப்பது, வழக்குப் பதியாமல் இருக்க லஞ்சம் என்று செம்பட்டி போலீசார் செழிப்பில் உள்ளதாக, பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.
செம்பட்டி காவல் நிலைய காக்கிகளின் ஆட்டத்திற்கு சம்மட்டி அடியை கொடுப்பது யார் என்ற கேள்வியே பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் , காவல்துறை உயர் அதிகாரிகளும், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் இந்த காவல் நிலையத்தில் உள்ள போலீசாரை தீவிரமாக கண்காணித்து திடீர் சோதனை நடத்தி, இவர்களின் முறைகேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பொதுமக்களை, லஞ்ச வேட்டை காக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





