--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று ரெட் அலர்ட்..!

2

ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதனால், தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என கூறியுள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திலும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

முன்னதாக, நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாதம் முதல் தற்போது வரை 21 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது இயல்பை விட 10 சென்டி மீட்டர் அதிகம் என்றும் தெரிவித்தார். சென்னையை பொறுத்தமட்டில் 92 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பதாகவும், இது இயல்பை விட 48 மில்லி மீட்டர் அதிகம் எனவும் கூறினார்.

Right Menu Icon