அவசியம் ஏற்பட்டால் இருவரும் இணைவோம்..! கமல், ரஜினியின் அடுத்தடுத்த பேட்டியால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம்
அவசியம் ஏற்பட்டால் நாங்கள் இருவரும் இணைந்து தமிழக அரசியலில் ஒன்றாக பயணிப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடுத்தடுத்து கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பையும், பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல், ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. முக்கியமாக நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோரின் அரசியல் மீது அனைவரின் கவனமும் திசை திரும்பியுள்ளது என்றே கூறலாம்.
திடீரென மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்தாண்டு தொடங்கிய கமல், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற ம்க்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தனி முத்திரை பதித்தார். ஆனால் ரஜினியோ, கடந்த கால் நூற்றாண்டாக அரசியலுக்கு வரப்போவதாக பாவ்லா காட்டியே வந்தார். கடைசியாக 2 வருடங்களுக்கு முன்பு தாம் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும், 2021 சட்டப் பேரவைத் தேர்தல் தான் தமது இலக்கு என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அது முதலே ரஜினி கட்சி தொடங்கப்போவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த கமல் 60 நிகழ்ச்சியில், கமலுடன் ரஜினியும் பங்கேற்றார். திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில், இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கொளுத்திப் போட்ட விஷயம் பெரும் பரபரப்பானது.
அதாவது, அரசியலில் கமலும், ரஜினியும் இணைந்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் நன்மையாக இருக்கும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து விழாவில் பேசிய ரஜினி, கமலுக்கும் தமக்கும் உள்ள 43 ஆண்டு கால நட்பை யாராலும் பிரிக்க முடியாது என்றார். அத்துடன் முதல்வராவோம் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அதன் பின் அவரது ஆட்சி நீடிக்குமா? என்று அனைவரும் சந்தேகப்பட்டனர். ஆனால் அதிசயமாக இன்னமும் எடப்பாடி ஆட்சி நீடிக்கிறது. இது போன்ற அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும் என்று பஞ்ச் வைத்து ரஜினி பேசியது பரபரப்பை அதிகரித்தது.
இதனால் ரஜினியும் கமலும் அரசியலில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் தமிழக அரசியலில் கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதற்கு விடை தருவது போல், தேவைப்பட்டால் இருவரும் இணைவோம் என இன்று மாலை ஒரு மணி நேர இடைவெளியில் கமலும், ரஜினியும் அடுத்தடுத்து கொடுத்த பேட்டி தமிழக அரசியல் களத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று இன்று மாலை சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்.தமிழகத்தின் நலனுக்காக ஒன்றாக பயணிக்க வேண்டும் என்றால் அரசியலில் ஒன்றாக பயணிப்போம் என்று கமல் தெரிவித்தார்.
கமல் இந்தக் கருத்தைக் கூறிய அடுத்த ஒரு மணி நேரத்தில், ரஜினியும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கமல் கூறியது குறித்து கேட்டதற்கு, ஆமோதிப்பது போல், அவசியம் ஏற்பட்டால் இருவரும் ஒன்றாக இணைவோம் என்று ரஜினியும் கூறினார்.
தமிழ் சினிமா உலகில் 43 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் உலக நாயகன் கமலும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தமிழக அரசியலில் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.





