சென்னையில் மீண்டும் தொடங்கிய மழை..!
சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 2 நாட்களாக தலைகாட்டாத மழை, இன்று மீண்டும் தலைகாட்டியது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பொழிந்தது.
இதனால், புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. புதன்கிழமையும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால், ஒரு சொட்டு மழை கூட பெய்யாததால் நிம்மதியடைந்தனர்.
இதேபோன்று நேற்றும் எங்கும் மழை பெய்யவில்லை. இரண்டு நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், சென்னையில் மீண்டும் கனமழை பெய்தது. அதிகாலை 2.30 மணி முதல் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு கனமழை பெய்தது. தியாகராய நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில் அதிகாலை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், சோலையூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.





