உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கத் தடை..! மாநில தேர்தல் ஆணையம் தகவல்!!
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேசன் கார்டுதாரர்கள் அனைவகுக்கும் வரும் தைப்பொங்கலுக்கு ரூ 1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தற்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் இந்த பரிசுத் தொகுப்பை அனைவருக்கும் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன் இந்த பரிசுத் தொகுப்பை வழங்கினால், அது தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக திசை திருப்பப்படும் .எனவே இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அலமேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.





