பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை சுட்டுக் கொன்றவர் கோர்ட்டில் சரண்
சென்னையை அடுத்த வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த விஜய் என்பவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சென்னை அருகே, வண்டலூர் வேங்கடமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ், 19. பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர். வேங்கடமங்கலம் பார்கவி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கேசவனின் மகன்கள் விஜய் மற்றும் உதயா ஆகியோர், இவரது நண்பர்கள்.
நேற்று மதியம் முகேஷ், விஜயின் வீட்டுக்கு சென்றார். விஜய் இருந்த அறைக்கு முகேஷ் சென்றார். சிறிது நேரத்தில், அறையில் வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு, விஜயின் தம்பி உதயா அறைக்குள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் முகேஷ் கிடந்தார். ‘தெரியாமல் சுட்டுவிட்டேன்’ என்று கூறிவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து, விஜய் தப்பி ஓடினார்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, வலது நெற்றில் குண்டு பாய்ந்து, முகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் விஜயை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கியால் முகேஷை சுட்ட விஜய், இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? அது என்ன ரக துப்பாக்கி? எதற்காக முகேசை சுட்டார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





