--- --:--:-- --

பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும் – ராமதாஸ்

1

பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும் என பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி, மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என சுமார் நான்காயிரம் பேர் பங்கேற்றனர்.

 

இதில், பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸைத் தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, பொதுக்குழுவுக்கு நிறுவனரை கட்டாயம் அழைக்கப்பட வேண்டும் என்பது உட்பட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து அன்புமணிக்கு எதிரான கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையை ஜி.கே. மணி வாசித்தார். அப்போது, அன்புமணி கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுவதாகக் கூறினார். ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது, பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தி ஒரு இருக்கை போட்டு நிறுவனரை அவமானப்படுத்தியது அநாகரீகச் செயல் என்றும் சாடினார்.

 

பாமக-வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார். இதேபோன்று அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு பரிந்துரைத்தார். இதற்கிடையே, சமரச பேச்சை ராமதாஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், அன்புமணி நிராகரித்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 

ராமதாஸ் உருவாக்கிய தொலைக்காட்சியை அபகரித்துக் கொண்டனர் என்றும், ராமதாஸுக்குத் தெரியாமலேயே சென்னையில் பாமக அலுவலகம் தொடங்கியுள்ளனர் என்றும் அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. 40 முறை ராமதாஸிடம் அன்புமணி பேசியதாகக் கூறியது பொய் என்றும் பணம், பதவி ஆசைகாட்டி பாமக நிர்வாகிகளை ராமதாஸைச் சந்திக்கவிடாமல் தடுத்துள்ளனர் என்றும் கூறப்பட்ட அறிக்கையை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ராமதாஸிடம் சமர்ப்பித்தது.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்.!
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்.!
இதன்பின் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இது காசுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல. ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இங்கு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சமுதாயங்களுக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

 

வன்னியர் மட்டுமின்றி அனைத்து மக்களுக்காகவும் போராடுகிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சமுதாயங்களும் என் பின்னால் வாருங்கள், நீங்கள் நினைப்பவை நடக்கும். கூட்டணி அமைக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாமக தொண்டர்கள் நினைக்கும் கூட்டணியை அமைப்பேன். பாமக தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி நிச்சயம் அமையும். 10.5% இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வரைச் சந்தித்து பேராசிரியர் பாடம் எடுப்பது போல பாடம் எடுத்தேன்.

 

ஆனாலும் பயனில்லை. அரசு நினைத்தால் ஒரே வாரத்தில் நடத்தலாம். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியும். சில மாநிலங்கள் அதனைச் செய்துள்ளன. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இதனை வலியுறுத்தி கடுமையான போராட்டம் நடத்தப்படும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு. இதுபோன்ற பொதுக்குழுவை பாமக கண்டதில்லை. பாமக தொண்டர்களிடம் பேசியே எந்த முடிவும் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

Right Menu Icon