--- --:--:-- --

நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

3

நெல்லை மாநகரின் முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான தச்சநல்லூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கம் போல தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை நேரம்.. யாரும் எதிர்பாராத போது… காவல்நிலையத்தின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. என்ன நடந்தது என யோசிப்பதற்குள் அடுத்த சத்தம்! உடனே வெளியே ஓடி வந்து பார்த்த போலீசார்.. ஷாக் ஆகினர்.

 

காவல்நிலைய முன்பக்க காம்பவுண்ட் சுவரில்…. தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகே பாட்டில் கண்ணாடிகள் சிதறி கிடக்க, பெட்ரோல் வாடையும் வீசியுள்ளது. அதை வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். உடனே சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ய.. அதில் பல்சர் மற்றும் ஹோண்டா பைக்குகளில் வந்த ஐந்து இளைஞர்கள், அடுத்தடுத்து இரு பெட்ரோல் குண்டுகளை, காவல்நிலையத்தில் வீசி சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

 

அதை தொடர்ந்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை, அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களைப் பிடிக்க களத்தில் இறங்கினர். அப்போதுதான் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரையிருப்பு சோதனை சாவடியை… அதே கும்பல் பைக்கில் கடந்துள்ளனர்.

 

அவர்களைக் கண்டதும் அலர்ட்டான போலீசார் வண்டியைத் தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்ற போது, அவர்கள் மற்றொரு பெட்ரோல் குண்டை வீசி அங்கிருந்த போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டிச் சென்றபோது, தாழையூத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்கலம் விலக்கு பகுதியில்.. மற்றொரு பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.

 

அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீச.. இச்சம்பவம் ஒட்டுமொத்த நெல்லையையே அலற விட்டது. பைக்கில் தப்பிச் சென்ற இளைஞர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? காவல்நிலையத்தின் மீதும், போலீசாரை நோக்கியும் பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது ? அதன் முதற்கட்ட விசாரணையில்.. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள், நெல்லை ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், கிருஷ்ண பெருமாள், சரண், அருண் உள்ளிட்ட ஐந்து பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சா வழக்கில் கைதாகி.. காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் தனது சகோதரர் அருண்குமாரை தப்பிக்க வைக்க.. அஜித்குமார் என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தெரியவந்தது.

 

இதனை அடுத்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அதில் சரண் என்பவர் போலீசீல் பிடிபட்டார், மீதமுள்ள 4 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர். பிடிபட்டவரிடம் குண்டு வீச்சுக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார் தேடுதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ஈடுபட்டு வரும் நிலையில், தப்பியோடியவர்கள் ஒரு இரவு கூட தாண்ட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon