டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு..! சிபிஐ விசாரணை கோரி வழக்கு!!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த முறைகேட்டில் அரசு துறைகளின் பல்வேறு ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தினமும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என பலரும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டு,கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சங்கிலித் தொடர் போல் இந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் தினமும் வெளியாகி வருவதால் தமிழகம் முழுவதுமே முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்களுடன் இடைத்தரகர்கள் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய் கை மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தினால் உண்மைத்தன்மை வெளிவராது. மூடி மறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணையில் நம்பகத்தன்மை இருக்காது. எனவே, சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும். இந்த விசாரணை, உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீலமேகம் என்ற வழக்கறிஞர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன் டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியம்,சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பாக புகார்கள் வெளிவந்த நிலையில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. விசாரணை முடிவுகளும் வெளியாகவில்லை.
தற்போதும் குரூப்-4 தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி நடத்தினால் உண்மைத்தன்மை மூடி மறைக்கப்படலாம். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணையை கண்காணிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரையும் நியமிக்க வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் மனு செய்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ரவீந்திரன், துரைசாமி ஆகியோர் அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.






