--- --:--:-- --

திருப்பூரில் பாலம் பணியால் பாதிக்கும் மக்கள்..!

8

* வள்ளுவா் நகரில் வீடுகள் இடிபடும் அபாயம்..!
* கொஞ்சம் மாற்றினால் பல குடும்பங்களுக்கு பயன்!

 

திருப்பூர் அணைப்பாளையம் பாலம் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், வீடுகள் இடிக்கப்படும் அபாயத்தை 20 குடும்பங்கள் எதிர் நோக்கி உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்து, திட்டத்தில் லேசான மாற்றம் செய்தால், மக்களின் வீடுகள் பாதுகாக்கப்படும். அவர்களின் துயரம் துடைக்கப்படும்.

 

திருப்பூர் காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி, 2010ஆம்  தொடங்கப்பட்டது.  ஆனால்,  அரசு தரப்பில் நிர்ணயம் செய்த இழப்பீடு தொகை மிகவும் குறைவு என்று கூறி,  அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கடந்த பல ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் 2018ஆம் பாலம் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும் ஒருசில வீட்டு உரிமையாளர்களின் இடத்தை கையகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பாலம் பணிகள் தள்ளிப் போடப்பட்டு வந்தன. பல முட்டுக்கட்டைகளுக்கு பின், திமுக ஆட்சி வந்ததும் பாலம் பணி தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி,  தற்போது அணைப்பாளையம் பாலம் கட்டும் மீண்டும் தொடங்கி உள்ளது.

 

இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது, ரூ. 18 கோடி என்று பாலம் பணிகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய மதிப்பீடு ரூ. 40 கோடி ஆகும். வேலம்பாளையம் ரோடு, மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம்- காலேஜ் ரோடு என பல முக்கிய சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால் பல குடியிருப்புகளும் நிறுவனங்களும் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன.  இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் இப்பகுதியில் சாலையை கடந்து செல்வது மிகவும் சிரமாக இருந்து வருகிறது.

 

இந்த சூழலில் தான் பாலம் பணிகளை தொடங்குவது என்று 4 மாதங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின. மேயர் உள்ளிட்டோர் நேரில் ஆய்து செய்துவிட்டு சென்றனர். வரும் ஜூன் மாதத்திற்குள் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து அதிகாரிகள் பணிகளை தொடங்கி உள்ளனர்.

 

அதன்படி, பாலம் கட்டும் பணிகளுக்காக சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூர் 25-வது வார்டுக்குட்பட்ட ரங்கநாதபுரம், திருவள்ளுவர்நகரில் மின்கம்பத்தை அகற்றவும், அப்பகுதியில் உள்ள 15 வீடுகளை இடித்து அகற்றுவது தொடர்பாகவும் அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

 

அடுத்த நாளே, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் சுரேஷ், நில அளவையாளர்கள் ஜெயராம், கார்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் வள்ளுவர் நகரில், அளவீடு செய்வதற்காக சென்றனர்.

திருவள்ளுவர் நகரில் சாலையின் ஒரு பகுதியில் குடியிருப்புகள் உள்ளன; மற்றொரு புறம் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. சாலையின் மத்தியில் இருந்து இருபுறமும் இந்த பக்கம் 11.5 மீட்டர், மற்றொரு பக்கம் 11.5 மீட்டர் அளவீடு செய்து அகற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து, பெண்கள் உள்பட பலர் கண்ணீருடன் ‘குற்றம் குற்றமே’ வார இதழ் நிருபர் குழுவிடம் தெரிவித்ததாவது:

ஏறத்தாழ 50 ஆண்டுகளாக வள்ளுவர் நகரில் சாலையை ஒட்டி வசித்து வருகிறோம். பாலம் பணி மிக அத்தியாவசியமானது. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சாலையை அகலப்படுத்தும் போது எங்களது வீடுகள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. பல லட்சம் ரூபாய் கடன் பெற்று கட்டப்பட்ட வீட்டை, பாலம் பணிக்காக இடிக்க வேண்டாம்.

 

பாலம் பணியால் வீடுகளை இழக்க நேரிடுமோ என்ற கவலையில் இருக்கிறோம். இதே வருத்தத்தில் கடந்தாண்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் பலர் மன உளைச்சலில்  உள்ளோம்.  வீடு இதே பகுதியில் இருக்க வேண்டும். அதற்கேற்ப திட்டத்தை சிறு மாற்றம் செய்து பாலம் பணிகளை தொடங்க வேண்டும்.

 

பாலம் பணியும் தடைபடக் கூடாது என்பதற்காக சிறு திருத்தம் செய்யலம. அதன்படி, சாலையில் இரு புறமும் தலா 11.5 மீட்டர் சரிசமமாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பதிலாக, வீடுகள் இருக்கும் பக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் அளவீட்டை குறைக்க வேண்டும்; மாறாக எதிர்புறம் உள்ள கம்பெனியின் முன்பகுதி இடத்தை அரசு கையகம் செய்து பாலத்தின் திட்டத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.

 

சிறு அளவில் பால திட்டத்தை மாற்றுவதால் ஏறத்தாழ 150 வீடுகள் பாதுகாக்கப்படும்; குறிப்பாக இடிக்கப்படலாம்  என்ற ஆபத்தில் உள்ள 20 வீடுகள் இதனால் பாதிக்கப்படாது. எப்போதும் மக்கள் நலனின் அக்கறை காட்டும் ஆளும் திமுக அரசும், இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறோம்.

 

அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வை ஏற்படுத்தி தருவார் என்று கருதுகிறோம்.  வீடு இடித்தால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்; மாற்று வழிக்கு எங்கே செல்வது என்று பொதுமக்கள் கண்ணீருடன் ‘குற்றம் குற்றமே’ தரப்பிடம் முறையிட்டனர்.

 

திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் தரப்பில் விசாரித்த போது, திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் மேலிடத்திற்கு  சென்று அனுமதி பெற வேண்டும்.  பட்டா தருவது போன்ற முடிவை அரசு தான் எடுக்க முடியும் என்றார்.

அதேநேரம்,  விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரலாம் என்பதாலும், 2026 சட்டமன்ற தேர்தல் ஆண்டு என்பதாலும் இந்த விவகாரத்தில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை தந்து திமுக அரசும் திருப்பூர் மேயர், சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்று கருதப்படுகிறது.

 

மக்களின் யோசனைப்படி சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள கம்பெனி இடத்தை பெற்று பாலம் பணிகளில் மக்களின் வீடுகள் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்த வேண்டும். போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள்  இதை செய்து, ஏழை மக்களின் வீடுகளை காப்பாற்ற வேண்டும்.

 

திடீர் மறியலால் பரபரப்பு
நம்பிக்கையை தந்த எம்.எல்.ஏ.!

வீடுகள் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. தகவல் அறிந்து முதல் நபராக முந்திக் கொண்டு தொகுதி எம்.எல்.ஏ. வான கே.என்.விஜயகுமார், 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

அப்போது பொதுமக்கள் சார்பில் எம்.எல்.ஏ. விஜயகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  அதில், “கடந்த 47 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. பாலம் வேலை நடைபெறுவதால் 15 வீடுகளை காலி செய்ய சொல்லி அச்சுறுத்துவதாக தெரிகிறது.

இதனால், எங்களுடைய வாழ்வாதாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறோம். எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்கள் வீடுகளை பாதுகாத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.  முறையாக அளவீடு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து சென்றனர்.

 

Right Menu Icon