கொரோனா தொற்றால் ஒருவர் பலி..!
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் இதுவரை 70 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
70 கோடிக்கும் அதிகமானோருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியாவை பொறுத்தவரை, நேற்று மட்டும் 412 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 4,50,09,660ஆக உயர்ந்துள்ளது. இதில், 98.81 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அனைவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். மேலும் தமிழ்நாட்டில் திருவள்ளூர், கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இணை நோய்க்கு சிகிச்சைக்கு சென்றவர்களை பரிசோதித்தபோது 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் இது ஜே.என். 1 வகை கொரோனா வைரஸா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே இவர்களின் மாதிரிகள் புனே உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்று இன்று அவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





