வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி – பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி என்றும் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள அசாம் மாநிலத்திற்கு, பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.
திப்ருகார் மாவட்டத்தின் மொரான் பைபாஸில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் ‘அவசரகால விமான தரையிறங்கும் தளத்தை’ தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பயணித்த C-130J ரக விமானம், அவசர காலங்களில் போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது.
பின்னர், இந்தத் தளத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வான்வழிச் சாகச நிகழ்ச்சிகளைப் பிரதமர் பார்வையிட்டார். இந்தியாவின் அதிநவீன போர் விமானங்களான ரஃபேல், சுகோய்-30 MKI, தேஜஸ் LCA ஆகியவை சாகசத்தில் பங்கேற்றன.
பிரதமர் வந்திறங்கிய C-130J சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் C-17 குளோப்மாஸ்டர் ஆகிய ராட்சத விமானங்கள் மிகக் குறுகிய தூரத்தில் தரையிறங்கி மீண்டும் ஏறும் திறனை வெளிப்படுத்தின குவஹாத்தி மற்றும் வடக்கு குவஹாத்தியை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3,030 கோடி ரூபாய் மதிப்பிலான குமார் பாஸ்கர் வர்மா சேது 6 வழிப் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து குவஹாத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் தற்காலிக வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அமிங்காவ்னில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான அதிநவீன தேசிய தரவு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். ‘பிஎம்-இ-பஸ் சேவா’ திட்டத்தின் கீழ் குவஹாத்தி உட்பட 4 நகரங்களுக்காக 225 மின்சாரப் பேருந்துகளை மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். காங்கிரஸ் காலத்தில் அசாமிற்கு வெறும் 10,000 கோடி ரூபாய் வரிப் பகிர்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். பிரம்மபுத்ரா நதியின் மீது காங்கிரஸ் 70 ஆண்டுகளில் 3 பாலங்களை மட்டுமே கட்டியதாகவும், பாஜக கடந்த 11 ஆண்டுகளில் 5 பாலங்களை கட்டி முடித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்





