--- --:--:-- --

“திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லையாம்!” ஒரே நாளில் ‘அந்தர் பல்டி’யடித்த கே.எஸ் அழகிரி!!

4d332c69-1ce9-455f-9072-52c1d33da5cb

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுவதாக நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளார். திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியிலும் எந்தப் பிரச்னையுமில்லை எனறு கூறி நேற்று கூறிய குற்றச்சாட்டுகளில் இருந்து ஒரேயடியாக ஜெர்க் ஆகியுள்ளார்.

 

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து, இன்று மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர், து.தலைவர் பதவி கூட திமுக தரப்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 303 ஒன்றியங்களிலும் இரண்டே ஒன்றியங்கள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை வெளியிட்பிருந்தார்.

 

அதில், கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்படுகிறது. எங்களை மதிக்கவில்லை என்ற ரீதியில் கே.எஸ்.அழகிரி சாடியிருந்ததால், தி மு க – காங்கிரஸ் உறவில் விரிசல் என பரபரப்பு கிளம்பியது. ஆனால், காங். மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்றே இதனை மறுத்தார் காங்-திமுக கூட்டணி தொடரும் எனவும், கேட் எஸ்.அழகிரியின் அறிக்கையில் மிரட்டல் எதுவுமில்லை. ஆதங்கத்தைத் தான் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறி சமாளித்திருந்தார்.

இந்நிலையில், ஒரே நாள் இரவில் என்ன நடந்ததோ, இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி அந்தர் பல்டி அடித்தது போல், நேற்று கூறியதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நேற்று அறிக்கையில் கூறியது, நேற்றோடு முடிந்துவிட்டது. திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து விலக வில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி . திமுகவுடனான நட்பு எப்போதும் போல் தொடர்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்து ஒரு வழியாக சமாளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon