ஆன்மிக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் நித்யானந்தா
தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் பதில் தந்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நித்தியானந்தாவின் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான விசாரணைக்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டிய லெனின் கருப்பன் அவர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 31ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் கர்நாடக சிபிசிஐடி காவல் துறையினரும், நித்தியானந்தா தரப்பினரும் ஒரு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்த டிஎஸ்பி பால்ராஜ் நீதிமன்றத்தில் நோட்டீஸ் நித்யானந்தாவின் சீடர்களில் ஒருவரான குமாரி, அர்ச்சனந்தாவிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும் பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா தற்போது இல்லை என்றும் அவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் குமாரி,அர்ச்சனந்தா தாக்கல் செய்த பதில் மனுவில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தமக்குத் தெரியாது என கூறியும் காவல்துறையினர் நீதிமன்ற நோட்டீசை தம்மிடம் வற்புறுத்தி வழங்கிவிட்டு சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையில் நடவடிக்கைக்கு திருமதி மைக்கேல் அதிருப்தி தெரிவித்ததுடன் வழக்கில் விளையாட வேண்டாம் என்றும் கடிந்து கொண்டார்.






