நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பா? “தீ”யாக பரவிய வதந்”தீ”க்கு முற்றுப்புள்ளி!!
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் திறக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்திகள் வெறும் வதந்தி தான் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. மக்களை வீடுகளை விட்டு வெளியே நடமாடக் கூடாது என அடுத்தடுத்து கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மக்களை வீடுகளுக்குள் முடக்கும் பணியில் போலீசார் தெருத்தெருவாக கையில் லத்தியுடன் சுற்றி வருகின்றனர்.
இந்த ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் குடித்துப் பழகிய குடிமகன்களின் பாடுதான் படு திண்டாட்டம் என்றே கூறலாம்.தமிழகத்தில் தினமும் ரூ.100 கோடி அளவுக்கு சரக்கு வியாபாரம் நடைபெற்று தமிழக அரசுக்கு வருவாயை வாரி வழங்கும் அட்சய பாத்திரமாக திகழ்ந்தது டாஸ்மாக் தான். தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு என்பதால், அனைத்து பணிகளும் முடங்கி வேலையின்றி, வருவானம் இன்றி சாமான்யர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு அதனாலும் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், 2100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என ஒரு புள்ளி விபரத்தை கூறி டாஸ்மாக் நிர்வாகம் புலம்புகிறது.
கடந்த திங்களன்று ( 23-ந் தேதி) நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு என தமிழக முதல்வர் அறிவித்தது தான் தாமதம், குடிமகன்கள் ஒரு வாரத்திற்கு தேவையான சரக்கை வாங்கி ஸ்டாக் வைக்க முடிவு செய்து கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் முதல் நாளில் 200 கோடி ரூபாய்க்கும், மறுநாளில் 6 மணி நேரத்தில் 240 கோடி ரூபாய்க்கும் சரக்கு விற்பனை தூள் பறந்தது. ஆனால் ஒரு வாரம் 144 தடை என்பது 21 நாட்களுக்கு ஊரடங்கு என உத்தரவு போடப்பட்டதால் இப்போது குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் பைத்தியம் பிடித்தது போல் அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி சரக்கை பதுக்கி வைத்து விற்பவர்கள் ரூ 115 விலையுள்ள குவார்ட்டர் பாட்டிலை ரூ. 300 வரை விற்றனர். இப்போதோ ரூ.300-க்கும் சரக்கு கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.
இந்நிலையில் தான், நாளை (31-ந் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளதாகவும், தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகிறது. யாரோ ஒரு குசும்புக்கார புண்ணியவான் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது போல் “சிலைடு” போட்டு சமூக வலைதளங்களில் பரப்பி விட அது தீயாய் பற்றி விட்டது. கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடை திறப்பாமே? என்ற பேச்சுதான் கொரோனா வைரஸை விட தீயாய் பரவியது.
இந்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்படப் போவதாக சமூக வலைதளங்களில் உலா வரும் செய்திகளில் உண்மை இல்லையென்றும், வெறும் வதந்தி தான் என்றும், ஊரடங்கு அமலில் உள்ள ஏப்ரல் 14-ந் தேதி வரை கடை திறப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






