கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் அறை திறப்பு..!
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய காத்திருப்போர் அறையை வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து காத்திருப்பு அறை கட்டி பொதுமக்களுக்காக அர்ப்பணித்து உள்ளோம்.
ஒரு வருடத்திற்கு முன்பு, நான் கோவை அரசு மருத்துவமனைக்கு இங்கு இருக்கக் கூடிய, குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் பிரசவ வார்டு பார்ப்பதற்காக வந்தேன். அப்போது, பொதுமக்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பிரசவ வார்டுக்கு உள்ளே அனுப்பிவிட்டு வெளியே மழை, வெயில், குளிர் என காத்து கிடந்தனர்.
அவர்கள் காத்து இருக்க அறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது.அதை பார்த்து விட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து காத்திருப்பு அறை ஒன்று கட்டி தருவதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டேன். உடனடியாக அவர்களும் இந்த இடத்தை ஆய்வு செய்து இந்த இடத்தில் கட்டலாம் என ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.
அதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து காத்திருப்பு அறை அமைத்துக் கொடுத்து உள்ளோம். இதனால் பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் குடும்பத்தார் இந்த அறையில் தங்கிக் கொள்ளலாம். இதில், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. கோவையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக புதிதாக நிறைய திட்டங்களை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என கேட்கிறோம் என்றார்.





