திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் : கனிமொழி
கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது என்றும் கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். சி வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 45 விழுக்காடு வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்து 33 விழுக்காடு வாக்குகளும் தவெக விஜய் 15 விழுக்காடு வாக்குகள் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்துடன் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் எந்த மோதல் போக்கும் இல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள்.
அடுத்த ஆட்சி அமைக்கப்போவது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நம்பிக்கையோடு மக்கள் உள்ளனர். ஒரு வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றும் ஒரு இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கூட்டணிக்கு வரும் புதிய கட்சிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக கூட்டணியில் மேலுமு சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





