14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..!
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஐஏஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நிதித்துறை செலவினங்கள் செயலாளராக லலிதாவும், ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லியும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கல்லூரிக் கல்வி ஆணையராக பொன்னையாவும் மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையராக பூஜா குல்கர்னியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அறநிலையத்துறை ஆணையராக வினய், கனிம வள நிறுவன மேலாண் இயக்குநராக சரவணவேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத் தலைவராக மங்கத்ராம் சர்மாவும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன மேலாண் இயக்குநராக சஜீவனாவும் , பசுமை எரிசக்திக் கழக மேலாண் இயக்குநராக பிஎன் ஸ்ரீதரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக பத்மஜாவும் ராணிப்பேட்டை ஆட்சியராக பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் ஆட்சியராக மதுபாலனும் நெல்லை ஆட்சியராக ஆனந்த் மோகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல வேலூருக்கு லீலா அலெக்ஸ், தஞ்சைக்கு ரேவதி மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டுக்கு வீரப்பனும் மதுரைக்கு ஆகாஷும், நாகைக்கு பிரவீன்குமாரும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியுள்ளனர். அதேபோல தேனிக்கு வைத்திநாதனும், தருமபுரிக்கு சரவணனும் மாவட்ட ஆட்சியர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரிக்கு பிரதாப், திருச்சிக்கு பிரதீக் தயாள், திருவண்ணாமலைக்கு வந்தனா கர்க் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.





