--- --:--:-- --

மே 2ஆம் தேதி ஆஜராகிறார் நயினார் நாகேந்திரன்..!

1

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றிய வழக்கில் மே 2ஆம் தேதி காவல்துறை முன் ஆஜராக உள்ளதாக நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

 

இது தொடர்பாக, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

 

அதனடிப்படையில், கடந்த திங்கட்கிழமை நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு ஆஜராகும்படி தாம்பரம் காவல்நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்காத நயினார் நாகேந்திரன், 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.

 

அதனைதொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு 2 ஆவது முறையாக காவல்துறையினர் நேற்று சம்மன் அனுப்பினர். அதில், மே மாதம் இரண்டாம் தேதி தாம்பரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மே 2ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்ப்பதாகவும், தனக்கும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.

 

எங்கேயோ பிடிபட்ட பணத்திற்கு தனது பெயரையும் சேர்த்து பயன்படுத்துவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளுக்கு சென்று பரப்புரை செய்ய இருப்பதால் மே 2 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Right Menu Icon