நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கு… சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினார். கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த செப். 27-ம் தேதி அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.65 லட்சத்தை வடமாநில கும்பல் கொள்ளையடித்தது.
பின்னர் அவர்கள் கன்டெய்னர் லாரியில் தப்ப முயன்றபோது, குமாரபாளையம் அருகே நாமக்கல் மாவட்ட போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, நடந்த என் கவுன்ட்டரில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜுமாந்தின் (37) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த முகமது ஹஸ்ரு (எ) அஜார் அலி (30) கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் (32), சவுக்கீன் கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26), முபாரக் (18) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பாக வெப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், சேலம் சரக டிஜஜி உமா உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமை யில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோரை டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு வெகுமதி வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.






