பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் துபாய் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர், பர்வேஸ் முஷாரப். அவரது உடல்நிலை திடீர் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
முஷாரப்புக்கு இருதய பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக, பர்வேஸ் முஷாரப் இருந்தார். அவருக்கு தற்போது 76 வயதாகிறது. கடந்த 2007இல், பாகிஸ்தானில் அவசர நிலையை பிறப்பித்தார். இது தொடர்பாக, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாக கூறி 2016 இல் துபாய் சென்றவர், பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. தேசத்துரோக வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனை அல்லது ஆயுட்கால சிறை தண்டனையைஎதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.





