பெண்களுக்கு கொலைமிரட்டல்! திருவாடானை அருகே நள்ளிரவில் வீடு சூறை… புகார் அளித்தும் அலைக்கழிக்கும் காவல்துறை!
திருவாடானை அருகே, பெண்கள் மட்டுமே இருந்த வீட்டில் நள்ளிரவில் புகுந்த கும்பல், வேலி, மரங்களை சூறையாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து வழக்கு பதியாமல், போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ளது, தோட்டாமங்கலம் கிராமம். இங்குள்ள நடுகுடியிருப்பு பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. திருவிழாவில், தலா 12 குடும்பங்கள் சேர்ந்து, ஒவ்வொரு மண்டகப்படியை நடத்தி வருவது காலம் காலமாக உள்ள வழக்கம். இதில், முதலாவது மண்டகப்படியை, சாந்தி (வயது, 58) என்பவர் மேற்கொண்டுள்ளார். இவரது கணவர் காளிதாஸ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சாந்திக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் சார்ந்துள்ள சமூகமானது, இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில், சிறுபான்மையினராக உள்ளது.
தோட்டமங்கலம் நடுகுடியிருப்பு பகுதியில், வழக்கம் போல் வரி வசூல் நடந்துள்ளது. ஆனால், இந்தாண்டு சாந்தி குடும்பத்தாரிடம் வரியை வாங்கிவிட்டு, ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பின்னர் அவற்றை திரும்பி தந்துள்ளனர்.
இதற்கு காரணம், சாந்தியின் குடும்பத்தார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இவ்வாறு கூறப்படும் ஆக்கிரமிப்பு பகுதிக்கும், கோவில் இடத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக சாந்தியின் மகள், தாய்வீடான தோட்டாமங்கலத்திற்கு வந்துள்ளார் . காளிதாஸ் – சாந்தியின் குடும்பத்தினர் மீது ஏற்கனவே காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த துரைராஜ் மகன் மணி, மணியின் மனைவி குமுதா, நாகநாதன் மகன் செந்தில் உள்ளிட்டோர், திருவிழா நேரம் பார்த்து, அவர்களிடம் பிரச்சனை செய்துள்ளனர்.
அதன்படி, எவ்வித முன்னறிவிப்போ, தகவலோ தெரிவிக்காமல், மார்ச் 31ம் தேதி நள்ளிரவு, சாந்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். எந்த ஆணும் இல்லாத நிலையில், பெண்கள் மட்டுமே இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, அவர்களது வீட்டில் போடப்பட்டிருந்த வேலியை பிரித்து எறிந்துள்ளனர்; அங்கிருந்த பூச்செடி, மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
சாந்தியின் கணவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்; உடல் நிலை சரியில்லாதவர். அவரது இரு மகன்களும் இல்லாத தருணம் பார்த்து, தனியாக இருந்த சாந்தியிடம் மணி, குமுதா, செந்தில் உள்ளிட்டோர் இவ்வாறு, அராஜகம் செய்து, அத்துமீறியது, அப்பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிருக்கு பயந்து போன சாந்தி, தனது மகள், பேரக்குழந்தைகளுடன் பதற்றத்துடன் திருவாடானை காவல் நிலையத்திற்கு நள்ளிரவிலேயே சென்றார். தனக்கு நேர்ந்த அச்சுறுத்தல்கள், வீட்டில் நடத்தப்பட்ட அராஜகங்கள் குறித்து, காவல் நிலையத்தில் விடியற்காலை 3 மணியளவில் புகார் அளித்தார். மணி தரப்பினரால் தனக்கும் தனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, போலீஸ் ஸ்டேஷன் வரை இந்த பிரச்சனை சென்றதால் அதிர்ச்சியடைந்த மணி தரப்பினர், பீதியடைந்தனர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த அவர்கள், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெற வேண்டுமென்று, உள்ளூர் பிரமுகர்கள் சிலரின் துணையுடன் முயன்று வருகின்றனர். மணி தரப்பினரின் அழுத்தத்தால், திருவாடானை காவல் நிலையத்திலும், சாந்தியின் புகார் மீது உடனடியாக வழக்கு பதியாமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, அரசு ஊழியராக இருக்கும் சாந்தியின் மகன், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நமது “குற்றம் குற்றமே” வார இதழுக்கு அளித்த பேட்டியில், “எங்களது வீட்டில் ஆக்கிரமிப்பு இருப்பதாக, ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, அதை மணி தரப்பினர் சட்டப்படிதான் அணுகி இருக்க வேண்டும். இப்படியா, பெண்கள் மட்டுமே தனியாக இருந்த வீட்டில் அத்துமீறி நடந்து கொள்வது? வீட்டை கொளுத்துவேன், கொலை செய்துவிடுவேன் என்று, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எனவே, அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தாயார் அளித்த புகாரின் பேரில் திருவாடானை காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் உடனடியாக பதிவு செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பு என்ற போர்வையில், தேர்த்திருவிழாவை பயன்படுத்தி, முன்விரோதத்தை தீர்த்துக் கொள்ள முயன்றுள்ளனர். கொலை மிரட்டல் விடுத்து அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். காவல்துறையினர் தொடர்ந்து மவுனமாக இருந்தால், சட்டப்படி நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை,” என்றார்.






