“சென்னை பேரணியில் பங்கேற்க வாருங்கள்”..! நடிகர், நடிகைகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!!
சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக வரும் 23-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இந்தப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டாலும், கட்சி சார்பற்ற முறையில் பேரணி நடைபெறும் என்றும் இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் எனவும் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார் இதனால் மக்கள் நீதி மையம் கட்சியும் இந்த பேரணியில் பங்கேற்கும் என அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க. ஸ்டாலின், சென்னையில் நடைபெறும் பேரணியில் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட தமிழ் திரை உலகத்தினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அத்துடன் இந்தப் பேரணிக்கு பின்னரும் மத்திய அரசு செவிசாய்க்க விட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி தமிழகம் இதுவரை கண்டிராத மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கையாக தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னையில் 23-ம் தேதி நடத்தவுள்ள பேரணிக்கு அனுமதி கேட்டு திமுக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகம் அருகில் இருந்து பேரணி தொடங்கி ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.பேரணிக்கு காவல்துறை அனுமதி கிடைக்குமா? என்பதும் இதுவரை தெரியவில்லை.





