தமிழ்நாடு மேம்பாட்டு விளையாட்டு ஆணையத்தின் புதிய (“லோகோ”) இலச்சினையை அமைச்சர் உதயநிதி திருப்பூரில் வெளியிட்டார்.
கலைஞர் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருப்பூர் அங்கேரிபாளையம் ஜெகா கார்டன் பகுதியில் உள்ள முத்துகிருஷ்ணன் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவரும், ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றவரும், கெலோ இந்தியா போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றவருமான சர்வதேச தடகள வீரர் அவிநாசி தருண் அய்யாசாமி, தேசிய தடகள வீராங்கனை தங்கமங்கை பிரவீனா ஆகியோர் தாங்கள் விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட்டபோது எதிர்கொண்ட பிரச்சினைகள், தடைகள், பின்னர் வெற்றி பெற்றபோது தமிழக அரசு செய்த பண உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் போன்றவற்றை விளக்கமாக பேசியதுடன், இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமையடைகிறேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 ஆயிரத்து 600 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் மதுரையில் தொடங்கப்பட்டது. இதுவரை மதுரை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு இந்த விளையாட்டு உபகரணங்களைக் கொடுத்துள்ளோம். இன்று திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளுக்கு கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, சிலம்பம் உள்பட 33 வகையான விளையாட்டு உபகரணங்களை கொண்ட 410 உபகரணங்களின் தொகுப்பை இங்கு வழங்கி உள்ளோம். இது முக்கியமான நிகழ்ச்சி. ஏனென்றால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய லோகோவை திருப்பூரில் உங்கள் முன்னிலையில் இன்று நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகின்றோம்.திருப்பூர் மாவட்டம் தொழில்துறைக்கு மட்டுமல்ல. விளையாட்டுத்துறைக்கும் பல முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. இங்கு கூட நிறைய சாதனையாளர்கள் வந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரரான தருண் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஆசிய அளவில் நடந்த போட்டிகளில் பல பதக்கங்களை வென்று நம்முடைய தமிழ்நாட்டிற்கும் அவர் பெருமை சேர்த்திருக்கிறார். அதுமட்டுமின்றி 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தேசிய அளவில் பலசாதனைகளைப் படைத்திருக்கிறார். அவருக்கு நம்முடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் திருப்பூர் ,முத்தணம்பாளையத்தை சேர்ந்த தடகள வீராங்கனையான பிரவீனா அண்மையில் நடந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித்தந்துள்ளார். மேலும் தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று திருப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் பிரவீனா. 2 பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 2 பேரும் திருப்பூருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இன்னும் சொல்லப் போனால் எங்கள் அத்தனை பேருக்கும் இந்த 2 பேரும் மிகப்பெரிய முன் உதாரணமாக அமைந்துள்ளனர்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை இந்தியாவே திரும்பிப் பார்க்கும்படி வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கேலோ இந்தியா இளையோர் போட்டிகளில் 38 தங்கப்பதக்கங்கள், 21 வெள்ளி பதக்கங்கள், 39 வெண்கல பதக்கங்கள் என 98 பதக்கங்களுடன் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் 2-து இடம் பிடித்தது. அதற்கு முழுக் காரணம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய, இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களாகிய நீங்கள்தான். அடுத்த முறை நிச்சயம் முதல் இடத்தைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி சி.ஐ.ஏ. என்ற அமைப்பு ஜனவரி மாதம் விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற உயரிய விருதை கொடுத்து நம்முடைய தமிழ்நாட்டையும், முதல்-அமைச்சரையும் கவுரவப்படுத்தினார்கள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இதுவரை 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ரூ.6 கோடி அளவுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதி உதவி அளித்துள்ளோம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் நம் வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து உயரிய ஊக்கத் தொகையை நம்முடைய, முதல்-அமைச்சரே தங்கள் கரங்களால் வழங்கியிருக்கிறார்கள்.
இதுவரை சுமார் 700 வீரர்களுக்கு ரூ.17 கோடிக்கும் மேல் உயரிய ஊக்கத் தொகையாக முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். கேலோ இந்தியா இளையோர் போட்டிகள், ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை, உலக அலைச்சறுக்கு போட்டி, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2023, தேசிய ஹாக்கி போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம். இந்தியாவிலேயே விளையாட்டுத் துறை என்றால் அது தமிழ்நாடுதான் என்ற வகையில் தொடர்ந்து புது புது முயற்சிகளையும் நம்முடைய துறை சார்பாக மேற்கொண்டு வருகிறோம். அதில் மிக முக்கியமானது தான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகின்ற திட்டம். விளையாட்டு துறை வளர்ச்சி என்பது நகரங்களில் தேங்கிவிடாமல் கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்.
கிராமங்களிலிருந்து ஏராளமான விளையாட்டுதுறை திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அடிப்படையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தோம்.
இந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி கிராமங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், புத்துணர்ச்சியோடும் இருக்க வேண்டும். கலைஞருடைய நூற்றாண்டு அவருடைய பெயரால் எத்தனையோ திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கின்றன. இருந்தாலும் விளையாட்டு துறை சார்பாக முதன்முறையாக கலைஞருடைய பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம்தான். கலைஞருடைய பெயரை இந்தத் திட்டத்திற்கு சூட்டியதற்கு மிக முக்கியக் காரணம். ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசயங்களும், திறமைகளும் கலைஞருக்கு இருந்தது.

அதுதான் அவருடைய சிறப்பு. அதையும் அவருடைய நூற்றாண்டில் நாங்கள் நடத்தி வைப்பது எங்களுடைய துறைக்குக் கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய பெருமை. இப்போது வழங்கப்படுகின்ற விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம்முடைய வீரர், வீராங்கனைகள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது சுலபமாக கிடைக்காது என்றும், நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார். எனவே விளையாட்டுத்துறை மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள எந்த துறையாக இருந்தாலும் அதில் வெல்ல வேண்டும் என்றால் இன்றைய இளம் தலைமுறையினர் அதற்காக உழைக்க வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வாங்க வந்திருக்கக்கூடிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அரசின் முகமாக, முதலமைச்சரின் முகமாக, இந்த அரசின் தூதுவராக நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் தொகுதிக்கு சிறு விளையாட்டரங்கம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கான அறிவிப்பு விரைவில் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார்.
தேர்தல் பிரச்சாரத்தில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை செய்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் மிகப்பெரிய வெற்றியை தாராபுரம் உள்பட இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் 40-க்கு 40 என்ற மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். எனவே கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் செய்து கொடுப்பதால்தான் அந்த தொடர் வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நம்முடைய தி.மு.க. ஆட்சிக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று ஐம்பெரும் விழா நடந்தது.
இந்த விளையாட்டுத்துறை நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தாலும், அவர் பொதுவாக எல்லாம் படிக்கனும், படிச்சிட்டே இருக்கனும் என்று சொல்வார். அவரை அழைத்து வந்து விளையாட வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறேன். எப்படி கல்வி ஒரு குழந்தைக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் விளையாட்டு. நேற்று முதலமைச்சர் அந்த பள்ளி கல்வித்துறை நிகழ்ச்சியில் பேசும்போது, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். படிங்க. படிப்பு மட்டும் தான் உங்களிடமிருந்து பறிக்க முடியாத சொத்து.
உங்களுடைய உடல் நலம், விளையாட்டுத்திறன் அதையும் உங்களிடத்தில் இருந்து யாரும் பிரிக்கமுடியாது. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரசாமி, பிரகாஷ், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினரும், செயலாளருமான மேகநாத ரெட்டி, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மண்டல தலைவர்கள் இல. பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தசாமி, தம்பி கோவிந்தராஜ், . முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், பூண்டி தலைவர் குமார், அரசு உயர் அதிகாரிகள், தி.மு.க உள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள், பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.





