புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சட்டவிரோத பணம் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் நான்கு அடைப்புகள் இருந்ததையடுத்து கடந்த ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவரின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். உடல் நலம் தேறியதையடுத்து செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு சுமார் 2 மணி நேரம் பரிசோதனை நடைபெற்ற பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக சிறை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 26 ஆம் தேதி வரை சிறையில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் உள்ளது.






