--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வரலாம்… அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Pandiyarajan 01

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவினால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரொனா தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமலுக்கு வந்துள்ளன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

தமிழகத்திலும் கொரோனா தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் மிக அதிகபட்ச எண்ணிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வந்தாலும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான பிரசாரம் களை கட்டத் தொடங்கி இருக்கிறது. அதே நேரம் இரண்டாவது அலை தீவிரமானால் பிரசாரத்திற்கு கட்டுப்பாடு உள்ளிட்ட சில நடவடிக்கைகள் வரலாம் என்று கூறப்படுகிறது. எனினும், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம் தந்துள்ளார்.

 

இந்நிலையில் சென்னை ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்று கூறுவது தவறு. நாங்கள் கொடுத்த பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்றார்.

 

கொரோனா அச்சுறுத்தல் குறித்தும் மீண்டும் லாக்டவுன் வருமா என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. அதனால் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள் இப்படியே போனால் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவினால் முழு ஊரடங்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என்றார்.

Leave a Reply

Right Menu Icon