ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உடன் அமைச்சர் எ.வ.வேலு இன்று பேச்சுவார்த்தை..!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள பணிஇடங்களை நிரப்புவது, ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்டமாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். காலை 11 மணிக்கு போட்டோ ஜியோ அமைப்புடனும் 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.





