திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம்!
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. விழாவின் 10-ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவின்போது, குற்றச் சம்பவங்களை தடுக்க 50 சிசிடிவி கேமராக்கள், 10 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தொலைந்துவிட்டால் எளிதாக கண்டுபிடிக்க பெற்றோர் பெயர் எழுதப்பட்ட ரிஸ்ட் பேண்டுகளை அணிவிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.






