உள்ளாட்சித் தேர்தல் இன்னும் தள்ளிப் போகிறதா..? டிச. 2-ந் தேதி அறிவிப்பாணை..! உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பு டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி மொழி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாகவே இருந்து வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன. இதைத் தொடர்ந்து, தேர்தலை நடத்தக் கோரி பல்வேறு பொது நல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இதையடுத்து தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதமே தேர்தல் தேதியை அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்திலும் தேர்தல் தேதியை அறிவிக்காமல், அக்டோபர் இறுதிக்குள் அறிவிப்பதாகக் கூறி வாய்தா வாங்கியது தேர்தல் ஆணையம் .
அக்டோபர் இறுதி வாரத்திலும் தேதியை அறிவிக்காமல் ஐகா வாங்கிய தேர்தல் ஆணையம் , மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம் . இதற்காக, தேர்தலை நடத்த போதிய வாக்கு எந்திரங்கள் இல்லை. மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்ற உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறியது மாநில தேர்தல் ஆணையம் .இதையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் 4 வார அவகாசம் அளித்தது.

இந்த 4 வார கால அவகாசமும் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளதால், எப்படியும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.அத்துடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தம் பணிகளிலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆளும் அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி பிற கட்சிகளும் விருப்ப மனு வாங்குவதிலும் மும்முரம் காட்டத் தொடங்கினர்.
ஆனாலும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் எழுப்பப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட, இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயாராக இல்லை. ஏதேனும் காரணம் கூறி தள்ளிப் போடவே முயற்சிப்பார்கள் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக அமைச்சர்கள் பலரும் அவரை கிண்டல் செய்தனர்.தேர்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. கட்டாயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறக் கூடாது என்று ஸ்டாலின் தான் பயப்படுகிறார். தேர்தல் என்றாலே ஸ்டாலினுக்கு ஜுரம், காய்ச்சல் வந்து விடுகிறது என்றெல்லாம் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார், வேலுமணி, செல்லூர் ராஜு போன்றோர் கிண்டலாக விமர்சித்தனர்.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பை ஏற்கனவே உறுதியளித்தபடி இன்னும் ஒரு வாரத்திற்குள் அறிவிக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம் .
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சித் தேர்தல் வார்டு வரையறை செய்யும் பணிகளையே தேர்தல் ஆணையம் முடிக்கவில்லை என குற்றம் சாட்டினார். இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களையும், வரும் டிசம்பர் 13-ந் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், திட்டமிட்டபடி டிசம்பருக்குள் தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.






