நண்பர்களே மோசடி செய்து ஏமாற்றிவிட்டு மிரட்டியதால் வழக்கறிஞர் தற்கொலை..!
சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து நண்பர்கள் தம்மை ஏமாற்றி விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ராஜேஷ்குமார் உயிரை மாய்த்துக் கொண்டவர்.
இறந்து போன வழக் கறிஞர் ராஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த செல்வதுரை மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளை சேர்ந்த பல நபர்களிடம் தனது பெயரை சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் மிரட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் தன்னுடைய இறப்புக்கு தனது நண்பர்களான செல்வதுரை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய இருவர் மட்டுமே காரணம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







