குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை பொதுமக்கள் பாராட்டு..!
திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம், 41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம், பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்டோர் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள். இந்த குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் ஜோதி அங்கமுத்து மகன் சிவபிரகாஷ் என்பவர் “ஓஷோ டிரேட்ஸ்” என்ற நிறுவனத்தை 5 வருடங்களாக நடத்தி வந்துள்ளார்.
அதில் அசிட்டிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோகுளோரிக் அமிலம், காஸ்டிக் சோடா, சோடா சாம்பல், மற்றும் கெமிக்கல் உப்புகள் ஆகியவற்றை உற்பத்தி செய்தும், வெளியில் இருந்து கொள்முதல் செய்தும் இருப்பு வைத்து விற்பனை செய்து வந்தனர். இங்கு வரும் அமிலங்கள் பெரிய பெரிய கனரக வாகனங்களிலும்.கேஸ் கொண்டு வர பயன்படுத்தும் டேங்கர் லாரிகளிலும் கொண்டு வரப்பட்டு பிளாஸ்டிக் டிரம்கள், கேன்களில் நிரப்பி வைத்து விற்று வந்துள்ளனர்.
இந்நிறுவனம் சில பொருட்களுக்கு மட்டுமே அனுமதி பெற்று விற்பனை செய்து வந்தததுடன், அமிலங்கள் உள்பட பல பொருட்களுக்கு அரசு அனுமதி பெறாமல் முறைகேடாக விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ரசாயன காற்றினால் துர்நாற்றம் வந்ததுடன் இதன் மாசுபாட்டால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தொண்டை வலி, கண்ணெரிச்சல் உள்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் சார்பில் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் வார்டு வாரியாக உள்ள பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர ஆயத்தமான நிலையில் இந்த 41 வது வார்டில் உள்ள இந்த பிரச்சனையும் நமது கவனத்திற்கு வந்தது. உடனே களத்தில் இறங்கிய குற்றம் குற்றமே நிருபர்கள் குழு அப்பகுதியில் பிரச்சினையின் தன்மையை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்த செய்தி நமது குற்றம் குற்றமே இதழில் வெளியானது.
அதன் எதிரொலியாக திருப்பூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டித்தனர்.மேலும், இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவன கட்டடத்துக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துச் சென்றனர். ஆனாலும் இந்த நிறுவனத்தினர் லாரிகளில் கெமிக்கல் ஏற்றி வந்ததுடன், இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக வீட்டிற்கு கொடுக்கப்படும் மின் இணைப்பு மூலம் இந்நிறுவனத்தை இயக்கி வந்துள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களுக்கும் மீண்டும் துர்நாற்றமும், மூச்சுத்திணறலும் ஏற்படவே கடந்த சில வாரங்களாகவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து குற்றம் குற்றமே நிருபர்கள் குழுவினர் மீண்டும் களத்தில் இறங்கி அங்கு நடப்பது குறித்து ஆதாரங்களுடன் கடந்த 14.06.2024 அன்று செய்தி வெளியிட்டதுடன், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. .உடனே திருப்பூர் தெற்கு தாசில்தார் கெளரி சங்கர் மேற்பார்வையில் திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அந்த நிறுவனத்தை ஆய்வு மற்றும் சோதனை செய்தனர். அப்போது அந்நிறுவனத்தினர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பிற துறைகளில் முறையான அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர், அதில் ஓஷோ நிறுவனத்தார் பொருட்களை பிரிக்கும் போது ஏற்படும் காற்று மாசுபாட்டினால், நிறுவனத்தைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு சளி, நுரையீரல் பிரச்சனை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுவதாகவும், இதில் 10-க்கும் மேற்பட்டோர் கடந்த காலங்களில் இறந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அனுமதியின்றி செயல்படும் நிறுவனத்தின் மீது அரசு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று திருப்பூரில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமை பொறியாளருக்கு 20.06.2024. அன்று அறிக்கை சமர்ப்பித்தனர். பின்னர் அதிகாரிகள் குழுவினர் மீண்டும் அந்த நிறுவனத்திற்கு வந்து அக்கட்டிடத்தை சீல் வைத்தனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் ஓஷோ நிறுவனத்தினர் மீண்டும் இந்நிறுவனத்தை இந்த இடத்தில் தொடர்ந்து நடத்த மாட்டோம் என்றும் வேறு இடத்தில் நடத்தி கொள்கிறோம் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து அந்நிறுவனத்தினர் தற்போது அங்குள்ள அனைத்து பொருட்களையும் வேறு இடத்திற்கு மாற்றி கொள்ள அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து அந்த கெமிக்கல் குடோன் செயல்பட தடை விதித்ததுடன், வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். இதன் பின்னல் அப்பகுதிக்கு சென்ற நமது குற்றம் குற்றமே ஆசிரியர் சஷ்டிமு.கண்ணதாசன் மற்றும் நிருபர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் இருகரம் கூப்பி கண்ணீர் மல்க வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது நடவடிக்கை குறித்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது ;
ராமசாமி :
எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது. வீட்டுக்கு பக்கத்தில் கெமிக்கல் குடோன் இருப்பதால், அதில் இருந்து வரும் வாசனையால் என் குழந்தைகள், என் தம்பி குழந்தைகளுக்கு ஹார்ட் பிராப்ளம் வந்து விட்டது. என்ன செய்வது என்று முழித்து கொண்டிருந்தோம். தற்பொழுது குற்றம் குற்றமே பத்திரிகையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த குடோனை வேறு பக்கம் மாற்றி சென்று விட்டார்கள். அதற்காக அரசுக்கும், குற்றம் குற்றம் பத்திரிகைக்கும் நன்றி.
செல்வராஜ் :
கெமிக்கல் குடோன் இருப்பதால் மக்களுக்கு ரொம்ப பாதிப்பு என்று குற்றம் குற்றமே பத்திரிகை நிருபர்கள் வந்த பொழுது கூறினேன். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். தற்பொழுது அந்த கெமிக்கல் குடோனை வேறு பக்கம் மாற்ற உத்தரவிட்டுள்ளனர். இந்த கெமிக்கல் குடோன் மீண்டும் இப்பகுதியில் வராமல் பாதுகாப்பு செய்து தர வேண்டும். இதற்கு உதவிய குற்றம் குற்றமே பத்திரிகைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றி. நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
குழந்தையுடன் உள்ள தாய் :
நான் இங்கு வந்து ஆறு வருஷம் ஆச்சு. இந்த கெமிக்கல் குடோனில் இருந்து வந்த காற்றை சுவாசித்தால் கடந்த ரெண்டு வருஷமா இருதயத்தில் நோய் வந்து பிரச்சினையாகிவிட்டது. இப்போ ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினர். அப்பொழுது குழந்தையும் கூட்டி சென்றேன். குழந்தைக்கும் ஹார்ட் பிராப்ளம் வந்துள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ரிப்போர்ட் என் கையில தான் இருக்குது. என் பொண்ணுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது. வாரத்துக்கு ரெண்டு மூணு தடவை ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம். என்னுடைய மாமியாருக்கும் கால் வலி வந்து படுத்துக் பணத்தை கிடக்கிறார்கள். இந்த நிலையில் குற்றம் குற்றமே நிருபர்கள் வந்து பேட்டி எடுத்து போட்டதுக்கு பின்னாடி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் அனைவருக்கும் நன்றி.
முனியாண்டி :
சாயக்குடோன் வந்து வீட்டுக்கு அருகில் வைத்திருந்தனர். ஐந்து ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. அதிகாரிகள் வரவில்லை. குற்றம் குற்றமே பத்திரிக்கை வந்து நடவடிக்கை எடுத்த பிறகு அதிகாரிகள் எல்லோரும் வந்து ஆய்வு செய்து தற்போது குடோனை அப்புறப்படுத்தி விட்டனர். எங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த குற்றம் குற்றம் பத்திரிகைக்கு நன்றி.











