திமுக – காங்கிரஸ் இடையே இழுபறியா? கே.எஸ். அழகிரி சொல்வது என்ன?
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி எதுவும் இல்லை என்று, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்,அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன், திமுக மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் இடங்கள் குறைத்து ஒதுக்கப்படுவதாகக்கூறி, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல், பல கட்ட பேச்சு நடத்தியும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் திமுக இன்னமும் எவ்வித உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை.
இந்த சூழலில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு திமுக அணியில் ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தரப்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கே.எஸ்,அழகிரி கூறுகையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் திமுகவுடன் எந்த இழுபறியும் இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்தது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து, ஓரிரு நாளில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அவர் மேலும் கூறினார்.






