--- --:--:-- --

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பாகிஸ்தான்

5

காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளின் மதகுகள் அடைக்கப்பட்டன. போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட சிந்து நதி ஒப்பந்த நிறுத்தம் முடிவு தொடரும் என இந்திய அரசு அறிவித்தது.

 

பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. முன்னதாக, பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும், தண்ணீரும், ரத்தமும் ஒன்றுநேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

 

இந்நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஜல்சக்தி அமைச்சகச் செயலாளருக்கு பாகிஸ்தான் நீர்வள அமைச்சகச் செயலாளர் சையது அலி முர்தாசா கடிதம் எழுதியுள்ளார். அதில், தண்ணீர் நிறுத்திவைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருகிறது. எனவே, தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

 

சிந்து நதி தொடர்பான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாக்., தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் ஆட்சேபனைகள் குறித்து விவாதிக்க முர்தாசா முன்வந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்பு ஜன.2023 மற்றும் மீண்டும் செப்.2024 ஆகிய இருமுறை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஆய்வு செய்து மாற்றியமைக்க கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்., இதுவரை தனது வெளிப்படையான விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை.

 

ஏப்.22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைத்த பின்னரே, பாகிஸ்தான் தனது விருப்பத்தை தெரிவித்ததாகத் தெரிகிறது.

Right Menu Icon