இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் விமான மையம்..!
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. சாலையில் செல்லும் டாக்ஸி கட்டணத்திலேயே, வானில் பறந்து செல்லும் வகையில் ‘எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி’களை (eVTOL) உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ‘தி ஈ-பிளேன் நிறுவனம்’ (The ePlane Company) மிக முக்கியமான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில், 60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட புதிய புரோட்டோடைப்பிங் மற்றும் சோதனை மையத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த புதிய மையத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி திறந்து வைத்தார். இதுவரை சிறிய அளவிலான மாதிரிகளாக மட்டுமே இருந்த இந்த மின்சார விமானங்கள், இனி நிஜமான பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட முழுமையான விமானங்களாக இங்கு வடிவம் பெற உள்ளன.
இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் சத்யா சக்கரவர்த்தி கூறுகையில், “விமானத்தில் பறப்பதை ஒரு சாதாரண டாக்ஸி பயணத்தைப் போல எளிமையாகவும், குறைவான செலவிலும் மாற்றுவதே எங்கள் இலக்கு” என்று தெரிவித்துள்ளார். இந்த 60,000 சதுர அடி பிரம்மாண்ட மையத்தில் ஒரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த எடையில் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அதிநவீன வசதிகள். சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இயங்கும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் அசெம்பிளி. வானில் பறப்பதற்கு முன்னதாக, தரையிலேயே வைத்து அனைத்து பாகங்களையும் முழுமையாகச் சோதிப்பதற்கான ‘கிரவுண்ட் டெஸ்ட் வெகிக்கிள்’ (GTV) வசதி.
பயணிகள் பயணம் செய்வது மட்டுமின்றி, அவசர கால மருத்துவ உதவி மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கும் ஏற்ற வகையில் தனித்தனி ரக விமானங்கள் இங்கு உருவாக்கப்பட உள்ளன. தற்போதுள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்க நீண்ட ஓடுபாதை தேவைப்படாது என்றாலும், அவை அதிக சத்தம் எழுப்பும் மற்றும் செலவு அதிகம்.
ஆனால், இந்த எலெக்ட்ரிக் (Electric Vertical Take-off and Landing) ரக விமானங்கள் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக எழும்பித் தரையிறங்கும் திறன் கொண்டவை. அதேசமயம் மின்சாரத்தில் இயங்குவதால் சத்தம் மிகக் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது.
சென்னையைப் போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த மின்சார விமானங்கள், விரைவில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வரும்போது நகர்ப்புறப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.





