ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தது இந்தியா..!
டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 உச்சி மாநாட்டு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா தலைமையேற்று நடத்திய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று 37 பக்கம் கொண்ட டெல்லி பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜி20 உச்சிமாநாட்டின் 2ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஒரே எதிர்காலம் என்ற தலைப்பிலான இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வாக பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ ஆகியோர் மரக்கன்று வழங்கினர்.தொடர்ந்து, இந்தியாவிடமிருந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.






