பேருந்தில் அநாகரீகம்.. பெண் பகிர்ந்த வீடியோ வைரல்..!
கேரளாவில் பெண் பயணி ஒருவர் தனக்கு நேர்ந்த அநாகரீகத்தை வீடியோவாக இணையத்தில் பகிரவே, அந்த நபர் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரவே, பலரும் தங்களின் சந்தோஷங்கள், வேதனைகள் என அனைத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இது தீயாக பரவி பட்டி தொட்டி எல்லாம் பேமஸாகிவிடுகிறது. சமீபத்தில் கூட டெலிவரி பார்ட்னர் ஒருவர் எலி பேஸ்ட் ஆர்டர் செய்த நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றியதாக பேசிய வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. இப்படி இணையதளம் இருமுனையாக பரவும் சக்தி கொண்டது.
அந்த வகையில், நேற்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பெண் ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடன் பயணித்த 42 வயதுடைய நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த இளம்பெண் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்த நிலையில், அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
காவல்துறையின் அறிக்கையின் படி, தீபக் என்ற நபர் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாகவும், குடும்பத்தார் கதவை தட்டியும் வெகு நேரமாக கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டபடி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
தீபக் ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், வேலை காரணமாகவே வெள்ளிக்கிழமை கண்ணூருக்கு சென்றிருந்ததாகவும் அவரது உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர். மேலும், தீபக் ஒரு அப்பாவி என்றும், இந்த வீடியோவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே விபரீத முடிவு எடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





