தமிழ்நாட்டில் 7 தனித் தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவாக பதிவான வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் உள்ள 7 தனித்தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய 7 மக்களவைத் தொகுதிககிள் தனித்தொகுதிகள் ஆகும்.
இந்த தொகுதிகளில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். பட்டியல் சமூக மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனித்தொகுதி ஒதுக்குவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கிட்டத்தட்ட 3% குறைந்துள்ளது. இதில், தனித் தொகுதிகளில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பதிவான வாக்குகளை விட, இம்முறை சராசரியாக 3.5% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன.
அதன்படி, திருவள்ளூர் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது, 72.33% வாக்குகள் பதிவாகின. ஆனால், இம்முறை அந்த தொகுதியில், நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, 68.31% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதேபோன்று காஞ்சிபுரத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு, 75 .28% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இம்முறை, அதே தொகுதியில் 3.73% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன. அதாவது, காஞ்சிபுரத்தில் 71.55% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.விழுப்புரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது 78.62% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 2.15% குறைந்து 76.47% ஆக பதிவாகி உள்ளன.
நீலகிரி தொகுதியை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டு 73.99% ஆக இருந்த வாக்குப்பதிவு தற்போது 70.93% ஆக சரிந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 77.91% வாக்குகள் பதிவாகின.
ஆனால், தற்போது 2.59% குறைந்து 75.32% சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.நாகப்பட்டினத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 76.88% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், இம்முறை மிகக்குறைவாக, 5.33% சரிந்து, 71.55% ஆக பதிவாகி உள்ளது. இதே போன்று தென்காசியிலும் கடந்த தேர்தலின் போது 71.37% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.55% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.






