“நானும் கலைஞரின் பிள்ளைதான்; ஞாபகம் இருக்கட்டும்..!” – திருமண விழாவில் சீறிய மு.க.அழகிரி!!
நானும் கலைஞரின் பிள்ளைதான் ; ஞாபகம் இருக்கட்டும் என மதுரையில் நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரி காட்டமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதனால் அமைதி காத்து வரும் மு.க.அழகிரி, அவ்வப்போது நறுக்கென சில கருத்துக்களை கூறி சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இன்று அவருக்கு 70-வது பிறந்த நாள். எப்போதும் மு.க.அழகிரியின் பிறந்த நாளன்று அவருடைய ஆதரவாளர்கள் தடபுடலாக கொண்டாடி மதுரையையே திருவிழாக் கோலமாக்கி விடுவர். ஆனால் கருணாநிதியின் மறைவை அடுத்து கடந்தாண்டு பிறந்த நாளை கொண்டாடாத மு.க.அழகிரி, இந்தாண்டும் கொண்டாடவில்லை. இதனால் தொண்ட்ர்கள் யாரும் வாழ்த்து கூற தம் வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், அழகிரியின் நெருங்கிய நண்பரும், மூத்த வழக்கறிஞருமான மோகன் குமார் இல்ல திருமண விழா இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த திருமண விழா மு.க.அழகிரி தலைமையில் தான் நடைபெற்றது. இதனால் திருமண விழாவில் திரளாக பங்கேற்ற மு.க.அழகிரி ஆதரவாளர்கள், திருமண விழா மேடையையே மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா மேடையாக்கி விட்டனர். மு.க.அழகிரியை கேக் வெட்டச் செய்து உற்சாகமாக வாழ்த்து முழக்கமிட்டனர்.
பின்னர் திருமணத்தை நடத்தி வைத்து மேடையில் பேசிய மு.க.அழகிரி, சீற்றமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் பேசுகையில், இப்போது மறப்பது என்பது சாதாரண விஷயமாகி விட்டது. அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கூட என்னைப் பார்த்து வணக்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் என்னோடு நீண்ட காலம் பழகியவர்கள் பலர் பேசுவதைக் கூட தவிர்க்கின்றனர். இந்த நிலைமை எப்போது மாறுமோ தெரியவில்லை. இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டேன்.
நான் நினைத்ததை முடிப்பேன்; நினைத்ததைச் சாதிப்பவன் என்று என்னைப் பற்றி எல்லாருக்கும் நல்லாவே தெரியும். நானும் கலைஞரின் பிள்ளைதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என யாரையோ குறி வைத்து சாடுவது போல் மு.க.அழகிரி சீறியது பரபரப்பாகி விட்டது.
மு.க.அழகிரியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் பல இடங்களில் அவருடைய ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மு.க.அழகிரியின் நீண்ட கால நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






