--- --:--:-- --

மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன் – எடப்பாடி பழனிசாமி

1

என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக இணைந்ததைத் தொடர்ந்து, டிடிவி தினகரனை அன்போடு வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

 

இந்நிலையில் அவர் முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. பிறகு அமைச்சர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஊழல் திமுக அரசை அகற்ற என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே. வாசன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ்நாடு மக்களையும், கலாச்சாரத்தையும் வஞ்சிக்கும், தேசவிரோத திமுக கூட்டணி அரசை அகற்ற நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம். மு.க. ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோரின் ஊழல்கள் தமிழ்நாடு மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

 

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “என்.டி.ஏ.வில் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் மூலம் எங்களின் பங்காளி சண்டைகளை தூக்கி ஓரம் வைத்துவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த திமுக ஆட்சியை வீழ்த்த மீண்டும் நாங்கள் இந்த என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

 

இந்நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது பதிவில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon