இந்த மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்..!
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.





