தமிழ்நாட்டில் கொட்டும் கனமழை.. இன்று 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தருமபுரி, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்தது. மேலும் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரை கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பொம்மிடியில் கனமழையால் சாலையில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அங்குள்ள அண்ணா பூங்கா சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூரில் ராயபுரம், கரட்டாங்காடு, கருவம்பாளையம், வீரபாண்டி சுற்றுவட்டாரத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பிரிட்ஜ்வே காலனியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்லில் நேற்று மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. திண்டுக்கல் – கரூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் அடர் பனி மூட்டத்துடன் கனமழை கொட்டியது. மதுரை கோரிப்பாளையம், தல்லாகுளம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. திருமங்கலம் சுற்றுவட்டாரங்களான கரிசல் பட்டி, மேலக்கோட்டை, வடகரை மறவன்குளம், கப்பலூரிலும் பரவலாக கனமழை கொட்டியது.
தூத்துக்குடி மாநகரில் இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பிற்கலில் திடீரென மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது. கோவில்பட்டி அருகே பசுவந்தனை சுற்று வட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனமழை பெய்த நிலையில், மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பருப்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம், காடம்பாடி, புத்தூர், சிக்கல் ஆழியூர், செல்லூர், ஐயவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
மயிலாடுதுறை, மங்கைநல்லூர், கோமல், ஸ்ரீகண்டபுரம், குத்தாலம், நீடூர், ஆறுபாதி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், சேந்தமங்கலம், நன்னிலம், குடவாசல், மணக்கால் அரசவணங்காடு, ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை கொட்டியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது. புதுக்கோட்டை மாநகரில் இரண்டாவது நாளாக இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று காலை கனமழை கொட்டியது. இதன்காரணமாக ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உட்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.






