சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை..!
திருவாரூர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரை கடந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், யாழ்ப்பாணத்திற்கு 90 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு 190 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்திய நேரப்படி மாலை 3.30 முதல் 4.30 மணி வரை கரை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.






