4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் – இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது.
இதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வடதமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு குஜராத் கடலோரப்பகுதிகள் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.






