கோவை, நீலகிரியில் இன்று கனமழை.. நாளை முதல் 5 நாட்கள் மிக கனமழை..!
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 5 நாட்களுக்கு கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே, தமிழ்நாட்டில் 8 இடங்களிலும், புதுச்சேரியிலும் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 புள்ளி 8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம், நாகை, தூத்துக்குடி, வேலூர், புதுச்சேரியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், தஞ்சாவூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.





