தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்..!
தமிழ்நாட்டின் 10 இடங்களிலும், புதுச்சேரியிலும் நேற்று வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வந்ததால் குளுமையான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வெயில் மீண்டும் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 10 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைக் கடந்துள்ளது.அதன்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, புதுச்சேரியிலும் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியுள்ளது. திருச்சி, மதுரை மாநகர், தஞ்சை மாவட்டத்தின் அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனக் கூறியுள்ள வானிலை மையம், வரும் திங்களன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 10ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வரும் 12ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரையில் இன்றும் நாளையும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.





