தமிழகத்தில் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் – வானிலை மையம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு படிப்படியாக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இதனிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மார்ச் 16 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 15 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





