தமிழகத்தில் மினி ஊரடங்கு… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா 2ம் அலை காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கோவை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று 1,636 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8,71,440 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,86,90,431 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 12,630 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இச்சூழலில், கொரோனா பரவல், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று விளக்கினார். இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகும் என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.
அதேநேரம், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும், மினி ஊரடங்கை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா அதிகமாக பரவி வருவதாக, ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவை மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன என்றார் அவர்.





