தமிழக அரசின் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தான் ஒரு மாத இடைவெளிக்குப் பின் மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்படலாம்.இதேபோல், தமிழ்நாட்டில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில் இன்று மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.






